Wednesday 13 November 2019

அசுரன் ஒரு புரிதல் (Understanding Asuran)

               அசுரன் ஒரு புரிதல்
            (Understanding Asuran)

"ஒரே மண்ணுல பொறக்குறோம்
ஒரே மொழிய பேசுறோம்
இது ஒன்னு போதாதா எல்லாரும் சேர்றதுக்கு...?"

ஒரு காலத்தில் மக்கள் குழுக்களாக பிரிந்து, அவரவர் வசித்த இடத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப தொழில்களை மேற்கொண்டனர். அத்தொழிலே அவர்களின் அடையாளமாக மாறி, "சாதி" என ஆகிவிட்டது. பின்,"மேல்சாதி ","கீழ் சாதி" என பிரிந்து மனித இனத்தின் மீது மனிதனே வேற்றுமை பாராட்டி, தள்ளி வைத்து, வஞ்சம் கொண்டு பல்வேறு கொடுமைகளை ஏவினான்.
என்று தொடங்கியது என தெரியவில்லை, இன்னும் தொடர்கிறது.....
      "தீண்டாமை ஒரு பாவச்செயல்" "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என  பெயருக்கு கற்பித்துவிட்டு, சாதியத்தின் அடையாளங்களை, கூறுகளை அடுத்த தலைமுறைக்கு சத்தமில்லாமல் கடத்தி கொண்டிருக்கிறோம்.

 தமிழகத்தில், பெரியார் &திராவிட இயக்கங்களினால் சாதிய ஒடுக்குமுறைகள் பெருமளவில் குறைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.  அதேநேரத்தில் முற்றும் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை.

நம்மில் பலர் "இட ஒதுக்கீட்டை" ஒழித்துவிட்டால், சாதி ஒழிந்துவிடும் என்பார்கள். இது இட ஒதுக்கீட்டின் வரலாற்றை,  அவசியத்தை ஆராயாமல், தெரியாமல் பேசுபவரின் மேம்போக்கான பேச்சாகும்.

தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் பெரும் மதிப்புடையவராக,சொத்து உடையவராக இருப்பார்‌. அவர் கம்பீரமாக உடையணிந்து வீட்டைவிட்டு வெளியேறும்போது நான்கு படிகள் கீழே நின்று ஒரு கூட்டமே கூழைக் கும்பிடு போட்டு "எஜமான், சாமி" என்று அழைக்கும். எப்போதும் அந்த படி மேல் நிற்பவரின் கதை பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது சினிமா மெல்ல  மாறி, கீழே நிற்பவரின் கதையை பேச ஆரம்பித்திருக்கிறது. எல்லோருக்கும் கதை இருக்குமல்லவா?

இந் நிலைமையை பார்த்து சிலர் கோபப்படுகிறார்கள். இன்னும் சிலர்  "இப்ப எங்கப்பா சாதி எல்லாம் இருக்கு? முதல்ல இதப் பத்தி பேசுறதே, படம் எடுக்கிறத நிறுத்துங்க அப்பதான் ஒழியும் "என்கிறார்கள். அவர்களுக்கு நாம் முன்வைக்கும் கேள்வி

மணக்கோலத்தில் மணமக்கள் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை;
இறந்தபின் புதைக்க இடம் தர மறுத்ததால்  பிரச்சனை;
உடன் படிக்கும் மாணவன் முதுகில் பிளடால் கீறிய சகமாணவன்
என்ற செய்திகள் எல்லாம் படித்துவிட்டு, அதற்கு காரணம்" சாதி" என்று தெரிந்த பின்பும் எப்படி  உங்களால் இப்படி பேச முடிகிறது....?

மொத்தத்தில் சாதி குறித்தான புரிதல், அதன் கொடுமைகளை பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் மிகக்குறைவாக உள்ளது. அதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் சினிமா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இங்குதான் அவசியம் ஆகிறான் அசுரன்



சாதி எப்படி ஒருவரை அடிமைப்படுத்தி விட முடியும்? எந்த வகையில் அடிமைப்படுத்த முடியும்? என்று கேட்பவர்களுக்கு சாதியின் தீவிரத்தை, நான்கே காட்சிகளில் "நச்சென்று" புரிய வைத்து விடுகிறார் வெற்றிமாறன்.


சோத்துக்கு கூட வழியில்லாமல் இருக்கும் ஒருவரை தனுஷ்(சிவசாமி) தன் முதலாளியிடம் சொல்லி வேலைக்கு சேர்த்து விடுவார்.
வேலை சேர்ந்த ஆள் ,முதல் நாள்  முதலாளிக்கு செருப்பு துடைப்பார்.  மூன்றாம் நாள்,  செருப்பு துடைக்கப்படும் , ஆனால் துடைப்பவர் வேறொரு ஆள், அவருக்கு பக்கத்தில் பேண்ட் சட்டையோடு நின்றபடி உத்தரவு பிறப்பிப்பான் தனுஷ்  வேலைக்கு சேர்த்துவிட்ட ஆள். அவனே,
பின்னாளில்   தனுஷை  எதிர்த்து பேசுவான், கைகலப்பில் ஈடுபடுவான், துன்புறுத்துவான், தனுஷின் குடும்பத்தை கொள்வான்.


சோத்துக்கு வழியில்லாமல், உடுத்த துணி இல்லாமல் வேலைக்கு சேர்ந்தவனுக்கு, உழைக்காமலேயே கிடைக்கும் பதவி உயர்விற்கான காரணமும் & தன்னை வேலைக்கு சேர்த்துவிட்டவனையே  எதிர்த்து நிற்பதற்கான  துணிவும்   அதிகாரமும் தான் சாதி.
(இவ்வளவு தெளிவான காட்சியமைப்புக்கு நன்றி வெற்றிமாறன்.)


படம் இன்னும் பல்வேறு களங்களை அப்படியே காட்சிப்படுத்தி, வரலாற்றை கண் முன் நிறுத்துகிறது .
அவற்றில் சில....

பஞ்சமி நிலம் மீட்பு

நிலம் ஒவ்வொருவரின் அதிகாரம். ஒருவருக்கு நிலம் கிடைத்துவிட்டால், அதைக்கொண்டு அவர் வாழ்வில் சுயசார்பு முன்னேற்றத்தை எய்த முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு, " நிலம்" முதலிய அடிப்படை தேவைகள் எதையும் அடைய விடாமல், அவர்கள் எந்த விதத்திலும் முன்னேறிவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது மற்றொரு குழு. இழந்த உரிமையை திரும்பி கேட்கும் போது, அதை தடுக்க அவர்கள் எந்த எல்லைவரை போகிறார்கள் என்பதை பதிவு செய்து,நிலத்தின் மீதான  அதிகார வன்மம் சொல்லப்பட்டிருக்கிறது.

செருப்பு

சாதாரணமாக காலில் அணியும் செருப்பு கூட அணிய முடியாமல், மீறி அணிந்தால் அவமானப் படுத்தப் படுவது

நிலம் குடும்பம் கொலை

பிற்கதையில், சிவசாமி (தனுஷ்) வேறொரு ஊரில் யார் வம்புக்கும் போகாமல் ,விவசாயம் செய்துகொண்டு ,"தான் உண்டு, தன் குடும்பம் உண்டு "என்று வாழ்ந்து கொண்டிருப்பார். பெரிய பணக்காரர் (வடக்கூரான் )சுற்றியுள்ள இடத்தையெல்லாம்  வளைத்து போட, எஞ்சியிருப்பது சிவசாமியின் நிலம். அதை அடைய வடக்கூரான் சிவசாமி குடும்பத்தின் மீது ஏவும் வன்முறையும், எதிர்த்து நின்று அதற்காக அக்குடும்பம் கொடுக்கும் விலையும் கொடுமையின் உச்சம்.
தன் பிள்ளையை காப்பாற்ற, ஒடுக்கப்பட்ட ஒருவன் , எந்த எல்லைக்கு தள்ளபடுகிறான் என்பதற்கு , ஊர் காலில் தனுஷ் விழும் காட்சியே... சாட்சி.

கல்வி & அதிகாரம்

படத்தில் சிதம்பரம் ,அப்பா சிவசாமியிடம் கேட்பான் "நம்ம அண்ணன கொன்னது வடக்கூரான்னு,  எல்லாருக்கும் தெரியும் அவன் ஜெயிலுக்கு போல..,? நான் அவன கொன்னதுக்கு ,  நம்ம மட்டும் ஏன் பயப்படனும் ?"
அதற்கு சிவசாமியின் பதில் "துட்டு வேணும் லே"
ஒடுக்கப்பட்ட மக்களின் மீது ஏவப்படும் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
படம் முழுவதும் கல்வி மற்றும் அதிகாரத்தின் அவசியம் பேசப்பட்டிருக்கிறது. இறுதியில் சிவசாமி தன் மகனிடம் சொல்லும் வசனம்" படி ,அதிகாரத்துக்கு போ போயி அவனுக நமக்கு செஞ்சத,
நீ எவனுக்கும் செய்யாத" இதுதான் அடுத்த தலைமுறைக்கான செய்தி.
படத்தில் சமமாக ஆதிக்க சாதியில் உள்ள நல்லவர்களையும் ,சாதியை ஒழிக்க போராடிய  பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

வன்முறை

சிலர் ஏன் இவ்வளவு  வன்முறை என்கிறார்கள்.
உங்கள் அன்றாட வாழ்வை வாழ விடாமல் தடுத்தால், உங்கள் வாழ்வையே சூனியம் ஆக்கினால், அந்த சுழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? இவ்வளவு  கொடுமைகளை கடந்து திரையில் அறிவாள் ஏந்தி சிவசாமி வரும்போது "அப்படித்தான் வெட்டி சாய்" என்று பார்வையாளர்கள் பெரும்பாலானோரின் மனம் கத்திருக்கும்.
தனி ஒருவன் தன் நிலத்தை காப்பாற்ற முயலும் போது, காலில் செருப்பு கூட அணிய முடியாத போது, தன் குடும்பமே கண்முன் எரியும்போது, எஞ்சியிருக்கும் தன் குடும்பத்தை காப்பாற்ற முயலும் போது வரும் கோபமே அசுரன். இதை வன்முறை என்ற கூட்டில் அடைத்து விட முடியாது.

வெற்றிமாறன்

வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் ஒரு வரம் .தரமிக்க முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்." வெக்கை" நாவலை படமாக்கத் துணிந்து, அதை சீர்குலைக்காமல், இன்னும் சில உண்மை கதைகளை சேர்த்து, அழகாக கோர்த்து, ஒரு திரைப்படமாக,வாழ்வியலாக, நேர்மையாக, உண்மைக்கு மிக நெருக்கமாக, மிகுந்த கவனத்துடன் படமாக்கியிருக்கிறார்.
படத்தின் கதாபாத்திரங்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இசை மற்றும் தொழில்நுட்பத் துறைகள் நேர்த்தி. வசனங்களில் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் .அதுவும் அந்த கடைசி வசனம் "அதி அற்புதம்". சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ள ஒரு எழுத்தாளராக தடம் பதிக்கிறார் வெற்றிமாறன்.

படத்தின் வெற்றிகள்

1)சாதியத்தை பற்றி தெளிவாக புரிதல் இல்லாத ஒரு தலைமுறைக்கு, சமுதாயத்திற்கு சாதி கடந்து வந்த பாதைகளை அதன் கொடுமைகளை எடுத்துச் சொல்ல அவசியமாகிறது அசுரன்.
2)இந்த கொடுமைகளை பார்த்து, புரிந்து இனி இதுபோல் நடக்கக் கூடாது என்று நல்ல மனங்கள்  பேசிக்கொள்கிறார்கள்.
3)பஞ்சமி நிலம் மீட்பு குறித்து பேச்சு தொடங்கியிருக்கிறது.
4)சிலருக்கு படம் தாங்கிய கருத்துக்களின் மீது கோபம் வந்திருக்கிறது. இதுவும் வெற்றியே. அந்த கோபம் என்பது படத்தில் காட்சிபடுத்தபெற்ற கொடுமைகளுக்கு அவர்களின்  வருத்ததின் வெளிப்பாடே ஆகும்.
இவ் வாழ்வியலை "வெக்கையாக" பதிவுசெய்த மூத்த எழுத்தாளர் "பூமணி அவர்களுக்கும்" திரைப்படமாக மாற்றி அனைவரிடமும் கொண்டு சேர்த்த "வெற்றிமாறன் அவர்களுக்கும் "காலமும் ,இம் மண்ணும் தலை வணங்கும். அசுரன் ஒரு வரலாற்றுப் பதிவு.

இப்படைப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது.‌‌..(புரிதல்)

இம்மண்ணில் இல்லாத ஒரு மாயை- சாதியை முன்னிறுத்தி கொடுமைகள் நடக்கும் வரை, கடைசி ஒருவன் பாதிக்கப்படும் வரை அசுரன், பரியேறும் பெருமாள் போன்றவர்கள் எழுந்து வரத்தான் செய்வார்கள்.

 இப்படங்களை பார்த்து என்ன புரிந்துகொள்ள வேண்டுமெனில் நடந்த கொடுமைகளுக்கு வருந்தி, இனி ஒருக்காலும் ஒருவனும் இதுபோல் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமை. அதுவே இப்படைப்புகள் சொல்லவரும் செய்தி.

சாதியம் ஒழிப்போம்; மனிதம் வளர்ப்போம்
        ~ நெடுஞ்சாலை நிழல்~
       @ அரவிந்த் ரகு

காதல் எனப்படுவது யாதெனில்..!

  ( Disclaimer -காதல் என்பது இதுதான், அதன் அறிகுறிகள் இதுதான் என்று யாராலும் வரையறுக்க முடியாது. அப்படி பொதுவாக வரையறுப்பது, சரியாகவும் இரு...